Pages

Wednesday 31 August 2011

பாக்தாத் பேரழகிகள் விற்பனைக்கு........!

பாக்தாத் நகரின், அல்ஜிஹாத் வட்டாரத்தில் அமைந்துள்ள விபச்சார விடுதி. அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள விலைமகளிரின் ஆகக் குறைந்த வயது 16. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள, மிகப் பெரிய அமெரிக்க இராணுவ முகாமில் தான், அவர்கள் பாலியல் தொழில் செய்கின்றனர். அழகிய ஈராக்கிய நங்கைகளை முகாமுக்கு அழைத்து சென்று கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க படைவீரர்களின் காமப்பசியை தீர்ப்பதற்கு மட்டும் ஈராக்கிய பெண்கள் விநியோகிக்கப் படுவதில்லை. கன்னிப் பெண்களை நுகரத் துடிக்கும், அயல்நாட்டு பணக்கார அரபுக்களின் இச்சைக்கும் பலியாகிறார்கள். வளைகுடா நாடொன்றில், ஈராக்கிய சிறுமிகளின் கன்னித் தன்மையை கழிப்பதற்கு, ஓரிரவுக்கு 4000 டாலர் கொடுக்கிறார்கள்.






ஈராக்கில் தற்போது பெண்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கன்னிப் பெண் 5000 டாலர்களுக்கு விலை போகின்றார். கன்னித்தன்மை இல்லாத பெண்ணின் விலை, அதிலும் அரைவாசி. சில இடங்களில்,வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் பெண் பிள்ளைகளை விபச்சார தரகரிடம் விற்று விடுகின்றனர். செய்னா எனும் 13 வயது சிறுமி, அவரது தாத்தாவால் விற்கப்பட்டாள். அரபு எமிரேட்சில் நான்காண்டுகள் பாலியல் தொழில் செய்த பிறகு, ஊருக்கு திரும்பி வந்தாள். தன்னை பண்டமாக விற்ற தாத்தா மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாள். எப்படியோ, சில நாட்களின் பின்னர், செய்னாவை காணவில்லை. இம்முறை பெற்ற தாயே, அவளை வட ஈராக்கை சேர்ந்த தரகர் ஒருவருக்கு விற்று விட்டாள். ஈராக்கில் பாலியல் தொழிலில் சுரண்டப்படும் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் Organisation of Women’s Freedom in Iraq (OWFI) என்ற தொண்டு நிறுவனம் இந்த தகவல்களை வழங்கியுள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவனமான OWFI , பாக்காத்தின் மிகப்பெரிய விபச்சார விடுதி ஒன்றின் உரிமையாளரை அம்பலப்படுத்தியதால், ஊடகங்களில் பிரபலமானது. அந்த விடுதியின் உரிமையாளருக்கு உள்துறை அமைச்சில் செல்வாக்கு இருப்பது தெரிய வந்தது. ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும், அந்த விடுதி இன்று வரை எந்த வித பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச குடிவரவுகளை கண்காணிக்கும் அமைப்பான International Organisation of Migration (IOM), வருடந்தோறும் எண்ணாயிரம் ஈராக்கிய பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப் படுவதாக தெரிவித்துள்ளது. ஈராக்கிய அரசு, பெண்கள் கடத்தப்படுவதை சட்டம் மூலம் தடை செய்துள்ளது. இருப்பினும் நடைமுறையில் எதுவும் நடப்பதில்லை. சில சமயம், பொலிஸ் ரெய்டுகளில் அகப்படும் பெண்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகின்றது. ஒரு தடவை, அமெரிக்க படையினரின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஒரு விபச்சார விடுதி மூடப்பட்டது. அந்த விடுதி நிர்வாகத்தில் வேலை செய்த ராணியா என்ற பெண், சிறைத் தண்டனைக்குப் பிறகு, தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் அறவிடும் வேலையை ராணியா செய்து வந்தார். அங்கே பெண்கள் எவ்வளவு மோசமாக சுரண்டப் பட்டனர் என்பதை இவ்வாறு விளக்குகின்றார். "தினசரி ஐம்பது ஆண்களை, ஒரு பெண் திருப்திப் படுத்த வேண்டும்." ராணியா 16 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தார். சதாமின் வீழ்ச்சிக்கு பிறகு, யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், அரச படையினர் ராணியாவின் சகோதரர்களை கைது செய்திருந்தனர். சகோதரர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், ராணியாவின் உடலை விலையாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். கற்பிழந்த பின்னர் ஊருக்கு சென்றால், அவமானம் காரணமாக கொலை செய்யப்படலாம் என்ற காரணத்தால், பாக்தாத் வந்து விலைமாதானார். கட்டாயக் கலியாணம் காரணமாக, குடும்ப வன்முறை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்கள், வேறு கதியின்றி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகின்றனர். இவர்களுக்கு "தொழில் வாய்ப்பு" பெற்றுக் கொடுப்பதற்கென்றே, பல தரகர்கள் பஸ் நிலையங்களிலும், சந்தைகளிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

2003 ம் ஆண்டுக்குப் பிறகே, ஈராக்கில் பாலியல் சுரண்டல் பிரச்சினை எழுந்துள்ளதாக Human Rights Watch (HRW) தெரிவிக்கின்றது. "2003 ம் ஆண்டு, சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரியிடம் இருந்து ஈராக் மக்களுக்கு விடுதலை கிடைத்தது." மத்திய கிழக்கு நாடுகளில், "அடக்கப்படும் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதற்காக" படையெடுத்ததாக அமெரிக்கா பீற்றிக் கொண்டது. அமெரிக்கா வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தின் பின்னர் தான், அங்கே பெண்களின் நிலைமை முன்னர் எப்போதும் இல்லாதவாறு மோசமடைந்தது. சதாம் காலத்தில் இல்லாத, இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு வந்தது. பெண்கள் அனுபவித்து வந்த சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப் பட்டது. தற்போது சட்டத்திற்குப் புறம்பான விவாகரத்துகளும், கௌரவக் கொலைகளும் மலிந்து விட்டன.

வறுமை, பெண்கள் மீதான வன்முறைகள், ஆட்சியாளரின் ஊழல் என்பன காரணமாக, பாலியல் தொழிலில் பெண்கள் சுரண்டப் படுவது அதிகரித்து வருகின்றது. 1991 வளைகுடா யுத்தத்திற்கு முன்னர், சதாம் ஆட்சிக் காலம், ஈராக் பெண்களின் பொற்காலம் ஆகும். ஈராக்கிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்ததால், எந்தப் பெண்ணும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகவில்லை. அனைத்து அரபு நாடுகளிலும், ஈராக் நாட்டுப் பெண்களே அதிகளவு கல்வியறிவு பெற்றிருந்தனர். மருத்துவர்களாகவும், வேறு உத்தியோகங்களிலும் பெண்கள் சிறந்து விளங்கினர். இன்று இதையெல்லாம் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அமெரிக்க படையெடுப்பு எல்லாவற்றையும் அடியோடு மாற்றி விட்டது. (கலையகம்)